சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு

பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களில் மேலும் பொது மக்களின் செலவீனங்களுக்கு வழிவகுக்கும் வகையில் மாற்றங்களைச் செய்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மீள்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விருப்பதாகத் தெரியவருகிறது.

"பொது மக்களுக்கான செலவீனங்களில் நெகிழ்வுப் போக்கை நாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதுடன் இதற்காக நியூயோர்க் சென்று சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவிருப்பதாக" நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிவரும் இலகு கடன் திட்டத்தில் அடுத்த கட்டமாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவிருந்த நிலையில், அரசியல் குழப்பம் காரணமாக அதற்கான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டன.

ஏற்கனவே 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருக்கும் சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது பற்றிக் கவனம் செலுத்தியுள்ளது.

நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இக்கடன்தொகை வழங்கப்படுகிறது. நிதிக் கட்டுப்பாடு, நிதி ஒதுக்கீடு, வரவுசெலவுப்பற்றாக்குறையை குறைத்தல் போன்ற பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அரசாங்கத்தின் செலவீனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், அடுத்தவருடம் தேர்தல் வருடம் என்பதால் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் நோக்கில் பொதுமக்களுக்கான செலவீனங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக சில விடயங்களை முன்னெடுக்க முடியாது. இதனை சர்வதேச நாணய நிதியம் புரிந்துகொள்ளும். வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை குறைக்கப்படவேண்டும். இருந்தபோதும் அதில் சில மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும் என நிதியமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

வருமானம் மற்றும் செலவீனங்களுக்கிடையிலான வித்தியாசத்தைக் குறைத்தல் மற்றும் கொடுப்பனவுகளுக்கான வட்டியைக் குறைத்தல், வருமானத்தை அதிகரித்தல் போன்ற பல்வேறு இலக்குகளை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியிருந்தது. இந்த இலக்குகளை இலங்கை ஏற்கனவே அடைந்துள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Mon, 12/31/2018 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை