கற்பனை உலகில் சஞ்சரித்து மக்களின் அபிலாஷைகளை உதறித்தள்ள தயாரில்லை

கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு பொதுமக்களின் அபிலாஷைகளை உதறித்தள்ள, ஒரு போதும் தாம் தயாரில்லை என்றும் மீண்டும் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை இயன்றவரை பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சில் (26) கடமைகளை பொறுப் பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

சுனாமி பேரனர்த்தம் நிகழ்ந்ததை இன்றைய நாள்(நேற்று) எங்களுக்கு நினைவூட்டுகின்றது. மக்களின் அன்றாடத் தேவைகளுள் நீர் இன்றியமையாதது. வெள்ளப்பெருக்கு அல்லது வரட்சி எவையாயினும், நீரோடு தொடர்புபட்டுள்ளன. அதனை முறையாக பொதுமக்களுக்கு விநியோகிக்க அமைச்சு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு பொது மக்களின் அபிலாஷைகளை உதறித் தள்ள நான் ஒரு போதும் தயாரில்லை. எனது 25 வருட அரசியல் வாழ்வில் அரைவாசி காலம் எதிர்கட்சியில் கழிந்துள்ளது. ஆளும் கட்சியில் இருந்தாலும், எதிர்க் கட்சியில் இருந்தாலும் பொது மக்களின் தேவைகளை சரிவர புரிந்து பணியாற்றியுள்ளேன். கடந்த 2 மாதங்களாக நாட்டின் அரசியலில் ஏற்பட்ட கொந்தளிப்பு பற்றி இங்கு நான் பேச வேண்டியதில்லை. அந்த பதற்ற நிலை இப்பொழுது தணிந்துவிட்டது.

நான் தீவிர அரசியலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் மிகவும் பரபரப்பான அந்த 51 நாட்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுவதாக ஏற்க னவே கூறியிருக்கிறேன். இப்பொழுது அப் புத்தகத்தை எழுதினால்,எங்களது தரப்பிலும் எதிர்த் தரப்பிலும் பலர் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்படும் என்றார்.

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை