எதிர்க்கட்சி தலைவர்: சபாநாயகரின் முடிவு பிற்போடப்பட்டது

மகேஸ்வரன் பிரசாத்

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான சபாநாயகரின் அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் எழுத்துமூலமான முறைப்பாடு மற்றும் அறிவிப்புக்கள் கிடைத்திருப்பதால் அது குறித்து ஆராய்ந்துபார்த்து பிறிதொரு தினத்தில் தனது முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

ஐ.தே.மு அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார். எனினும், இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்காமல் புதியவரை நியமித்திருப்பதால் தற்பொழுது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நேற்று) தனது முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னர் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் இந்த விவகாரம் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுடன், எழுத்துமூல முறைப்பாடொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐ.ம.சு.முவின் செயலாளர் நாயகம், மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்துள்ளார். எனவே இவை அனைத்தையும் ஆராய்ந்து கூடிய விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.

 

Sat, 12/22/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை