அடுத்த வருடத்தில் எந்த தேர்தலுக்கும் முகங்கொடுக்க சுதந்திரக் கட்சி தயார்

அடுத்த வருடம் நடைபெறும் எந்த ஒரு தேர்தலுக்கும் சுதந்திரக் கட்சி தயாராக உள்ளது. பரந்த கூட்டணியினூடாக தேர்தலுக்கு முகம் கொடுக்க ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக சுதந்திரக் கட்சி செயலாளர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், ஐ.ம.சு.மு மத்திய குழுவிலும் சு.க அமைப்பாளர் கூட்டதிலும் பரந்த கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முகம் கொடுப்பது பற்றி ஜனாதிபதி விளக்கினார்.கீழ்மட்டதில் இருந்து கட்சியை பலப்படுத்துவது பற்றியும் அவர் இங்கு தெளிவுபடுத்தியதோடு அடுத்த வருடம் மூன்று தேர்தல்களுக்கும் முகம்கொடுக்க தயாராகுமாறும் கூறினார்.

ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து நாம் செயற்படும் நிலையில், எமக்கிடையில் பிளவை ஏற்படுத்த ஐ.தே.க முயல்கிறது. பலமான எதிரணியாக நாம் செயற்பட்டு வருகிறோம். பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

சகல மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்துவது பற்றி கருத்து முன்வைக்கப்படுகிறது. கால தாமதமின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். முதலில் எந்தத் தேர்தலை நடத்தினாலும் அதற்கு நாம் தயாராக இருக்கிறோம். மாகாண சபைத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் என அடுத்த வருடம் எந்த தேர்தல் நடந்தாலும் கூட்டணியாக முகம்கொடுப்போம். இதில் ஐ.தே.கவினருக்கும் இணைய முடியும்.

பல மாகாண சபைகளின் காலம் முடிவடைந்துள்ளன. புதிய முறையில் தேர்தலை நடத்த முடியாவிட்டால் சட்டதிருத்தம் செய்து பழைய முறையில் தேர்தல் நடத்த முடியும். மாகாண சபையை தொடந்து பின்போட்டு காலங்கடத்தினால் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்றார்.

ஒப்பீட்டளவில் ரணில் விக்கிரமசிங்கவை விட மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட எமக்கு முடியும்.

பிரதமர் கருப்பு ஊடகம் என ஊடகங்களை அச்சுறுத்தியுள்ளார். ஆனால் ஜனாதிபதி ஊடகங்களை பயமுறுத்தியது கிடையாது. ஐ.தே.க ஆட்சியில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். ஜனாதிபதி ஊடகங்களுடன் சுமுகமாக செயற்படுகிறார். (பா)

 

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை