மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக விசா

மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முன்னாள் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள்ப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் விசாரணை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் கோப்பாய் பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்த விசாரணையில் முன்னாள் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரும் சமூகமளித்திருந்தார்.

விசாரணையின் பின்னர், ஊடகங்களுக்கு முன்னாள் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கூறுகையில், கடந்த 30 ஆம் திகதி திருநெல்வேலிச் சந்தியால், பலாலி நோக்கிச் சென்ற போது, பொலிஸார் வீதியில் வைத்து மறித்து
வாகன ஆவணங்களை காட்டுமாறு கோரினர். நான் பொலிஸாரிடம் ஆவணங்களை சமர்ப்பித்தேன். அப்போது, வாகன வரி தொடர்பான ஆவணத்தை வாகனத்தில் காட்சிப்படுத்தவில்லை என கூறி தண்டணைக்குரிய குற்றமென கூறினார்கள்.
அதன்போது, ஆவணங்களை கேட்டீர்கள் நான் கொடுத்தேன். ஆனால், வாகனத்தில் காட்சிப்படுத்தவில்லை என்பது எவ்வாறு குற்றமென கேட்ட போது, ஆசனப் பட்டி அணியவில்லை எனத் தெரிவித்தனர். பின்னர் உங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளோம் என கூறி சிங்களத்தில் எழுதப்பட்ட ஓர் ஆவணத்தை தந்தனர்.
அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால், இந்த ஆவணம் சிங்களத்தில் தந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தேன்.

அரசியலமைப்பின் பிரகாரம் வடகிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் உள்ளது. எனவே, வடகிழக்கில் உள்ளவர்களுக்கு தமிழில் தான் ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், எமது மொழி உரிமை இங்கு மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தேன். அதன் பிரகாரம், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அதன்பிரகாரம், எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இவ்வாறு மொழி உரிமைகள் பாதிக்கப்பட்டோர் முன்னோக்கி நகர்வோம் என்ற அமைப்பின் ஊடாக தனது கவனத்திற்கு கொண்டுவருவதற்கு தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு முன்னாள் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா பொது மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

Thu, 12/20/2018 - 17:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை