டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணி 6ம் இடத்துக்கு முன்னேற்றம்

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இழந்ததால் டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் 7ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி, ஒரு இடம் முன்னேறி மீண்டும் ஆறாவது இடத்தை பெற்றுக்கொள்ள, பாகிஸ்தான் அணி 7ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் மற்றும் அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகளின் பிறகு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை (11) வெளியிடப்பட்டது.

இதில் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த பாகிஸ்தான் அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 92 புள்ளிகளைப் பெற்று 7ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. இதன்படி, தரவரிசையில் 93 புள்ளிகளைப் பெற்றிருந்த இலங்கை அணி 6ஆவது இடத்துக்கு முன்னேறியது.

எனினும், இலங்கை அணிக்கு 6ஆவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள 15ஆம் திகதி நியூசிலாந்துடன் ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றியை அல்லது போட்டியை வெற்றி – தோல்வியின்றி நிறைவுக்கு கொண்டுவர வேண்டும்.

ஆனால், நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை 1-−0 என இலங்கை அணி கைப்பற்றினால் 96 புள்ளிகளையும், 2-0 என வெற்றி கொண்டால் 98 புள்ளிகளையும் பெற்று 6ஆவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை அணி இழந்தால் 91 புள்ளிகளைப் பெற்று டெஸ்ட் தரவரிசையில் ஒரு இடம் சறுக்கி மீண்டும் 7ஆவது இடத்தை நோக்கி பின்தள்ளப்படும்.

இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இலங்கை அணிக்கு இழக்க நேரிட்டால் 3 புள்ளிகளை இழந்து 90 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தைப் பெற்றுக் கொள்ளும்.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 105 புள்ளிகளைப் பெற்று 4ஆவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, 1-−0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினால் 107 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்தையும், 2-−0 என வெற்றி கொண்டால் தென்னாபிரிக்க அணியை பின்னுக்குத் தள்ளி 109 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தை நோக்கி முன்னேற்றம் அடையும்.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து அணி இழந்தால் 105 இலிருந்து 100 வரை அவ்வணிக்கு புள்ளிகளை இழக்க நேரிடுவதுடன், 2-0 என தொடரை இழக்க நேரிட்டால் 99 புள்ளிகளைப் பெற்று டெஸ்ட் தரவரிசையில் ஒரு இடம் சறுக்கி 5ஆவது இடத்தை நோக்கி 'நியூசிலாந்து அணி பின்தள்ளப்படும்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-−0 என இழந்த இலங்கை அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் நான்கு புள்ளிகளை இழந்து 7ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருந்தது.

குறித்த டெஸ்ட் தொடர் ஆரம்பமாக முன்னர் இலங்கை அணி 97 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

இங்கிலாந்து தொடரை 3-−0 என இழந்ததால் 93 புள்ளிகளைப் பெற்று 7ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.

இதன் காரணமாக தரவரிசையில் 95 புள்ளிகளுடன் 7வது இடத்திலிருந்த பாகிஸ்தான் அணி 6வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய டெஸ்ட் தரவரிசையின் படி இந்திய அணி (116 புள்ளிகள்) முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து அணி (108 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும், தென்னாபிரிக்க அணி (106 புள்ளிகள்) மூன்றாவது இடம், நியூசிலாந்து அணி (104 புள்ளிகள்) நான்காவது இடம் மற்றும் அவுஸ்திரேலிய அணி (102 புள்ளிகள்) ஐந்தாவது இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதல் 20 இடங்களில் 6 நியூசிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனினும், இவ்விரண்டு பிரிவுகளிலும் முதல் 40 பேரில் 4 இலங்கை வீரர்கள் மாத்திரம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன 753 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், தினேஷ் சந்திமால் (695 புள்ளிகள்) 12ஆவது இடத்திலும், குசல் மெண்டிஸ் (627 புள்ளிகள்) 20ஆவது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 689 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ள டில்ருவன் பெரேரா 20ஆவது இடத்தில் நீடிக்கின்றார்.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை