முன்னாள் தூதுவருக்கு எதிராக அமெரிக்கா 5 வழக்குகள் தாக்கல்

தூதரகக் கட்டட கொள்வனவில் 3,20,000 டொலர் மோசடி

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய ஜாலிய விக்கிரமசூரியவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் ஐந்து வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதரக கட்டடத்தைக் கொள்வனவு செய்வதில் 3,20,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்தமையுடன் தொடர்புபட்டதாக அவருக்கு எதிராக இரண்டு நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள், பணச்சலவை தொடர்பான இரண்டு மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும் குடிவரவுத் திணைக்களத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டு என மொத்தம் ஐந்து வழக்குகளைப் பதிவுசெய்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவுக்காறரான விக்கிரமசூரிய 2008ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுக்கான இலங்கைத் தூதுவராக 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

"2012ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து 2014 நவம்பர் வரையான காலப் பகுதியில் பிரதிவாதியான ஜாலிய விக்கிரமசூரிய, புதிய தூதரகக் கட்டடத்தைக் கொள்வனவு செய்வதில் இலங்கை அரசாங்கத்திடம் மோசடி செய்திருப்பதுடன், மோசடியான செயற்பாடு, பிரதிநிதித்துவம் மற்றும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்" என அமெரிக்காவின் கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்தில் கடந்தவாரம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு இந்த மோசடிகள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் இலங்கை அரசுக்கு அறிவித்ததுடன், அவரை வெளிநாட்டு சேவையிலிருந்து மீள அழைத்துக்கொள்ளுமாறு கோரியிருந்தது. அப்போது ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ அவரை மீள அழைத்துக் கொண்டபோதும் அவருக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் வழக்கும் தாக்கல் செய்யவில்லை. அமெரிக்கத் தூதுவர் என்ற ரீதியில் அவர் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிப்பதற்கு ராஜபக்ஷ நிர்வாகம் இடமளித்திருந்தது.

இவ்வாறான நிலையில் எப்.பி.ஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைத் திணைக்களம் என்பன மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த வாரம் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு எதிராக பதின்மூன்று பக்க குற்றப்பத்திரத்தை அமெரிக்க அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்தனர்.

"2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக ஜாலிய விக்கிரமசூரிய கடமையாற்றியுள்ளதுடன், பிரதிவாதியான அவர் தூதுவர் பதவியை வகிக்கும் போது சிலோன் ரோயல் ரீ அன்ட் சப்ளை என்ற நிறுவனத்துக்கும் உரிமையாளராகக் காணப்பட்டார்" என குற்றப்பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"2012ஆண்டு பிரதிவாதி 3024, வைட் ஹெவன் வீதி, வொஷிங்டன் என்ற முகவரியிலுள்ள புதிய தூதரகத்தை தெரிவுசெய்வதிலும் பங்கெடுத்திருந்தார். 2013ஆம் ஆண்டு இக் கட்டடத்தைக் கொள்வனவு செய்வதற்காக வொஷிங்டன் எச்.எஸ்.பி.சி வங்கிக் கணக்கிலிருந்து உத்தியோகபூர்வ நிதியைப் பெற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் கணக்கில் உள்ளடக்கப்படாத 3,32,027.35 அமெரிக்க டொலர்களை மூன்றாம் நபருக்கு மாற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் அவர் கைச்சாத்திட்டுள்ளார்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிரமசூரியவின் பணிப்புரைக்கமைய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமொன்றுக்கு 82 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளபோதும் அந்த நிறுவனத்தின் பெயர் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. இருந்தபோதும் பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பீ அறிக்கையில் விக்கிரமசூரிய அசோசியேட்டின் உரிமையைக் கொண்ட பேப்பர் க்ரவுன் எல்எல்சி நிறுவனம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிரதிவாதியான விக்கிரமசூரிய தூதரகத்தின் மின்னஞ்சலைப் பயன்படுத்தாது இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பியுள்ளார்.

இந்த இரண்டு நிறுவனங்களும் இலங்கை அரசாங்கத்துக்குச் சொத்தமானவை இல்லை என்பதும் அவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்களுக்காக 250,000 டொலர் பெறுமதியான காசோலையொன்று விக்கிரமசூரியவுக்குச் சொந்தமான சிலோன் ரோயல் ரீ நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை இலங்கையில் காசாக்குவதற்கு முயற்சித்தபோதும் அது வெற்றியளிக்கவில்லையென அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த மோசடிகள் தொடர்பில் இலங்கை தூதரக அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்ததும் விக்கிரமசூரிய அதனை மூடிமறைப்பதற்கும், பிழையாக வழிநடத்துவதற்கும் முயற்சித்ததாக குற்றப்பத்திரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தூதரக அதிகாரிகளுக்கு அவர் தீர்வு அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளார். எனினும் அது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் எழுதப்பட்டிருக்கவில்லை.

தூதரகத்துக்கான புதிய கட்டடக் கொள்வனவு தொடர்பில் விக்கிரமசூரியவுக்கு ஐந்து கொடுப்பனவுகள் மோசடியாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி 3,32,000 அமெரிக்க டொலர்களாகும் என்றும் குற்றப்பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதிவாதி இக் காசோலைகளை தூதரக காசாளரிடமிருந்து தானாக எழுதிப்பெற்றுள்ளதுடன் அவற்றை இலங்கை அரசாங்க வங்கிகளில் வைப்புச் செய்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wed, 12/26/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை