ஆஸிக்கு எதிரான 3 ஆவது ஆட்டம்: வலுவான நிலையில் இந்திய அணி

இந்தியா, - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி, ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் புஜாரா 68 ஓட்டங்களுடனும், விராட் கோஹ்லி 47 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து 92 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துள்ளனர்.

மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹனுமா விஹாரி மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர், ஆரம்ப துடுப்பாட்டத்துக்காக 40 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

ஹனுமா விஹாரி 66 பந்துகளை எதிர்கொண்டு 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய புஜாரா, மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து 123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

அத்தோடு இப்போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை பெற்ற மயங்க் அகர்வால், முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தினார்.

அதன்பிறகு 76 ஓட்டங்களுடன் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேற, அணித்தலைவர் விராட் கோஹ்லியும் புஜாராவும் ஜோடி சேர்ந்து நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதன்போது, பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளரான பெட் கம்மின்ஸ், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன்னமும் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், இந்தியக் கிரிக்கெட் அணி போட்டியின் இரண்டாவது நாள் இன்று தொடரும்.

Thu, 12/27/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை