அமைச்சரவையை 30 ஆக மட்டுப்படுத்த ஐ.தே.மு முடிவு

அமைச்சு பதவிகளை விட்டுக்ெகாடுக்க தயாரென
றிஷாத், மனோ, மலிக் அறிவிப்பு

 

அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தற்போதைக்கு முப்பதுக்கு மட்டுப்படுத்திக்கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை விடயத்தில் விட்டுக்கொடுப்பின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைவாக முன்னாள் அமைச்சர்களான றிஷாத் பதியூதீன், மனோ கணேசன், மலிக் சமரவிக்கிரம ஆகியோர் பதவிகளை ஏற்காமல் விட்டுக்கொடுக்கத் தயார் என்றும் தாம் இல்லாமல் அமைச்சரவையை அமைக்குமாறும் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருப்பதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளுந்தரப்பில் இணைந்து கொண்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சரவையை அமைப்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பெரும்பாலும் இன்று அமைச்சரவை அமைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஆளும் கட்சிப் பாராளுமன்றக் குழுக்கூட்டம் பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் வெற்றி கொள்ளும் பொருட்டு 50 நாட்களாக முன்னெடுத்த போராட்டத்தின் போது, தியாக உணர்வுடன் செயற்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தம்மோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய கடசிகளுக்கும், சிவில் சமூக அமைப்புகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். அடுத்த கட்டமாக எஞ்சியுள்ள பதவிக்காலத்தில் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் வகையில் ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே பொறுப்பேற்றிருக்கின்றது. இது தனித்த அரசாகும். எனவே, அரசின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30இற்குள் அமைய வேண்டியுள்ளது.

அரசுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் எதிர்காலத்தில் ஏனைய கட்சிகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மோடு இணைந்துகொள்ளும் பட்சத்தில் அவசியத்துக்கு ஏற்ப அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படுமெனவும் பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில், அரசுடனிருக்கும் சகல உறுப்பினர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மிக முக்கியமாக விட்டுக்கொடுப்பு தேவையாக உள்ளது. அரசை வழிநடத்தவே அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஏனையவர்களை நான் ஒருபோதும் ஒதுக்கிச் செயற்படமாட்டேன். அமைச்சுப்பொறுப்பு கிடைக்கவில்லை என யாரும் வருத்தமடையக் கூடாது.

கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து எதிர்காலத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய நிலைக்குள் நாம் இருக்கின்றோம். எனவே, நெகிழ்வுப் போக்குடன் விட்டுக்கொடுப்புடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென பிரதமர் சகல உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் சார்பில் தாங்கள் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருப்பதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை, புதிய அமைச்சரவையில் தான் எந்த அமைச்சுப் பொறுப்பையும் ஏற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம கூறியுள்ளார்.

இக்கூட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஆகியோர் சில அறிவுரைகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் செய்யாமல் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுள்ளனர். அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் போது குற்றச்சாட்டுக்களுக்குள்ளாக்கக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தவறிழைத்தவர்கள் விடயத்தில் தயவுகாட்டக் கூடாதெனவும் குற்றம் உறுதிசெய்யப்பட்டால் பாரபட்சம் பாராது தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

 

எம். ஏ.எம். நிலாம்


எம். ஏ.எம். நிலாம்
Wed, 12/19/2018 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை