இந்தோனேசிய சுனாமி உயிரிழப்பு 281 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் எரி மலை வெடிப்பை அடுத்து நீருக்கடியில் உண்டான நிலச்சரிவால் ஏற்பட்ட சுனாமி பேரலை யில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது. உயிர்தப்பியவர்களை தேடி இடிபாடுகளில் கனரக ஆயுதங்கள் மற்றும் வெறுங்கைகளால் மீட்பாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் உள்ள அனக் க்ரகடோவா எரிமலை ஒன்றில் ஏற்பட்ட சரிவு காரணமாகவே சுன்தா ஜலசந்தியின் விளிம்புகளில் 2 முதல் 3 அடி உயரத்திற்கு சுனாமி அலை தாக்கியதை இந்தோனேசிய வானிலை ஆய்வு நிலையம் உறுதி செய்துள்ளது.

மற்றொரு சுனாமி எச்சரிக்கை இன்று புதன்கிழமை வரை நீடிக்கப்பட்ட நிலையில் சுமார் 12,000 பேர் கரையோரப்பகுதிகளில் இருந்து கட்டாயமாக உயரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தால் குறைந்தது 1,000 பேர் காயமடைந்துள்ளனர்.

குழந்தை க்ரகடோவா என்ற அர்த்தம் கொண்ட அனக் க்ரகடோவா கடந்த பல மாதங்களாக சாம்பல் புகை மற்றும் எரிமலை குழம்புகளை கக்கிவரும் நிலையில் எரிமலையின் தென் மேற்குப் பகுதியில் 0.64 சதுர கிலோமீற்றர் பகுதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

“இதனால் நீருக்கடியில் மண்சரிவு ஏற்பட்டு சுனாமி உருவாகியுள்ளது” என்று வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ட்விகோரிட்டா கர்னாவாட்டி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஜாவாவின் மேற்குக் கடற்கரையான பெண்டக்லாங் பகுதிக்கு உதவிகள் செல்ல ஆரம்பித்துள்ளன. இங்கு 100 கிலோமீற்றர் நீண்ட கடற்களை பகுதிகளில் இடிபாடுகளை அகற்றி உயிர் தப்பியவர்கள் மற்றும் சடலங்களை தேடும் பணிகளில் நூற்றுக்கணக்காக படையினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பூகம்பம் அதிகம் தாக்கும் இந்த பரந்த தீவுப் பகுதிகள் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலான காலத்தில் அனர்த்தங்களால் அதிக உயிர்ச் சேதங்களை சந்தித்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் சுற்றுலா தீவான லொம்பொக் பூகம்பத்தால் தரைமட்டமானதோடு கடந்த செப்டெம்பரில் சுலவாசி தீவில் ஏற்பட்ட இரட்டை பூகம்பம் மற்றும் சுனாமியால் 2,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் எந்த முன் எச்சரிக்கையும் இன்றியே கடந்த சனிக்கிழமை கூனாமி தாக்கியது. இதனால் சிறு கடைகள், விடுகள் மற்றும் ஹோட்டல்கள் என 700க்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமாயின.

எனினும் எரிமலை வெடிப்பு மற்றும் நீருக்கு அடியில் ஏற்படும் எரிமலை வெடிப்புகளுக்கு எச்சரிக்கை கட்டமைப்பு ஒன்று இந்தோனேசியாவில் இல்லை என்று அனர்த்த தடுப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சுடோபோ புர்வோ குறிப்பிட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை அமைப்பு ஒன்று தேவைப்படுவதாக ஜனாதிபதி ஜொகோ விடோடோ நேற்று வலியுறுத்தி இருந்தார். “மக்கள் தப்பிச்செல்ல எச்சரிக்கும் முன்னெச்சரிக்கையை வழங்குவதற்கான கட்டமைப்பு அல்லது கண்காணிப்பு கருவியை கொள்வனவு செய்வதற்கு வானிலை அவதானிப்பு நிலையத்தை நான் அறிவுறுத்தினேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே கட்டட இடுபாடுகள் கொண்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற முயன்றதால் நேற்று வாகன நெரிசல் காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் காரணமாக அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது.

இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தித்தொடர்பாளர், “முதலில் அது சுனாமி அல்ல, கடல் கொந்தளிப்பு என்றும் எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறப்பட்டது” என்று தெரிவித்தார்.

பின்னர் நிலநடுக்கம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாக அவர் மன்னிப்பு கோரினார்.

இதற்கிடையில் ஞாயிறன்று தவறுதலாக விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை, மக்களிடையே பலத்த பீதியை ஏற்படுத்தியது.

இந்தோனோசியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவானா ஜாவாவின் மேற்குக் கரை பகுதியான பன்டென் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு சுமத்ராவின் லம்புங்கில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமை குறிப்பிட்டுள்ளது.

தெற்கு லம்புங்கில் கடந்த ஞாயிறு பின்னேரம் பாரிய புதைகுழி ஒன்றில் 16 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. உறவினர்களின் கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

“எங்கும் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. இடிந்த கார்கள், நொருங்கிய மோட்டார் சைக்கில், கட்டட இடிபாடுகளையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது” என செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கார்கள் மற்றும் கண்டெய்னர்கள் 10 மீற்றர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

1883ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது. இதன்போது ஏற்பட்ட சுனாமி காரணமாக 36,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 1927 ஆம் ஆண்டு தோன்றிய அந்தத் தீவு அது தொடக்கம் வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/25/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை