இரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இடத்தில்

செய்த நன்மைக்கு பலனாக தீமை தம்மை தேடி வருவதை கும்பிட போன கோயிலே தலையில் இடிந்து விழுந்ததைப் போல எனக் கூறுவது சிங்கள சமூகத்தின் ஒரு வழக்கமாகும். அதற்கு சமமான ஒரு சம்பவத்திற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன் இரணைமடு சென்ற ஜனாதிபதிக்கும் முகங்கொடுக்க நேர்ந்தது.

1906 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு குளத்தின் நிர்மாணப் பணிகள் 1922 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டு அன்றிலிருந்து அப்பகுதி விவசாயத்திற்கான நீர்ப்பாசனப் பணி ஆரம்பிக்கப்பட்டது.

அவ்வாறு சுமார் மூன்று தசாப்தங்கள் தன் பணியைத் தொடர்ந்த இரணைமடு குளம் 1954 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவின் உத்தரவின் பேரில் அப்போதைய விவசாய அமைச்சர் டட்லி சேனாநாயக்கவினால் புனரமைக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு மீண்டும் மக்களின் உபயோகத்திற்காக கையளிக்கப்பட்டது.

அதன் நிமித்தம் அக்குளக்கரையில் நிறுவப்பட்ட அப்பணியினை முன்னெடுத்த காணி அபிவிருத்தி அமைச்சர் புலங்குலமே திசா மற்றும் டீ.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் குறிக்கப்பட்ட நினைவுப் பலகை அண்மைக்காலம் வரை அவ்விடத்தில் இருந்து வந்தது.

அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு முறை அக்குளம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. 40 வருடகால இடைவெளியின் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு குளத்தின் புனர்நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விரிவான புனர்நிர்மாணப் பணிகளின் ஓர் அங்கமாக நிர்மாணிக்கப்பட்ட பாலத்துடன் கூடிய சுற்றுவட்டம் காரணமாக 54 ஆம் ஆண்டு அங்கே நிறுவப்பட்டிருந்த பழைய நினைவுப் பலகை 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புனர்நிர்மாணப் பணிகளின் திட்டப் பணிப்பாளரின் பணிப்புரையின் பேரில் அங்கிருந்து அகற்றப்பட்டது.

புதிய புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்து அக்குளத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வந்த பின்னணியில் அதனை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிமித்தம் கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய நினைவுப் பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதன்போது அங்கே பழைய நினைவுப் பலகை அகற்றப்பட்டிருந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கவில்லை. ஆயினும் அந்நிகழ்வின் பின்னர் சில ஊடகங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் குறிப்பிடும் புதிய நினைவுப் பலகையை அவ்விடத்தில் ஸ்தாபிப்பதற்காக பழைய நினைவுப் பலகை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதாக திரிபுபடுத்தப்பட்ட அடிப்படையற்ற செய்திகளை ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டிருந்தன.

நேற்று மாலை இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களை ஜனாதிபதி ஊடக துறையின் தமிழ் பிரிவு ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததற்கமைய வட மாகாண ஆளுநரை உடனடியாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி, பழைய நினைவுப் பலகையை 24 மணித்தியாலத்திற்குள் மீண்டும் உரிய இடத்தில் ஸ்தாபிக்குமாறு பணித்தார்.

சமூகத்தின் காவலனாகவும் சமூகத்தை மோப்பமிட்டு மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதனால் ஊடகத் துறையை காவல் நாய் எனக் குறிப்பிடுவதுண்டு. அந்தவகையில் ஊடகமும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களும் நேர்மையாக செயற்படுவார்களாயின் அது நாட்டுக்கே நன்மை பயக்கும் என்பதற்கு இச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகவே அமைகின்றது.

 ரவி ரத்னவேல்.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை