நேபாளத்தில் மாணவர்கள் சென்ற பஸ் விபத்து: 23 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சென்ற பஸ் வண்டி ஒன்று 700 மீற்றர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 23 பேர் பலியாகினர்.

நேபாளத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் டாங் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.

தாவரவியல் கல்விச் சுற்றுலாவுக்கு சென்று திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதிலிருந்து 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த விபத்தில் இரண்டு ஆசிரியர்களும், ஓட்டுநரும் பலியாகினர்.

இந்த விபத்துக்கு காரணம் அதிவேகமாக பயணம் செய்ததே என்று பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஏ.எப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

இந்த பஸ்ஸில் 37 பேர் பயணம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேபாளத்தில் வீதி விபத்துக்கள் அடிக்கடி நிகழக்கூடியவையே. மோசமான வீதிகள், சரியாக கவனிக்கப்படாத வாகனங்கள் மற்றும் பொறுப்பில்லாது வாகனம் ஓட்டுவதே அதற்கு காரணமாகும்.

கடந்த வாரம் இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்களை ஏற்றி வந்த லொரி ஒன்று நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.

Mon, 12/24/2018 - 10:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை