இந்தோனேசியாவில் சுனாமி 222 பேர் பலி: பல நூறு பேர் காயம்

இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் ஜவா தீவுகளில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுனாமியால் குறைந்தது 222 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இன்றி சுனாமி அலை தாக்கியதோடு பல நூறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைப்பதாகும். இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சுனாமியை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் உயர்வான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதோடு இந்த அனர்த்தத்தால் காணாமல் போனவர்களில் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மற்றொரு சுனாமி தாக்கும் அச்சம் இருப்பதால் மக்களை கடற்கரையை விட்டு விலகி இருக்கும்படி அனர்த்த முகாமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூரில் விடுமுறை தினமாக இருந்த கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவிலேயே இந்த சுனாமி தாக்கியுள்ளது. மேற்கு ஜோவா தீவான டன்ஜுஹ் லெசுங் கடற்கரை உட்பட பிரபல சுற்றுலா தளங்களையும் சுனாமி தாக்கியுள்ளது. இதில் ஜாவாவின் பென்டெக்லங் மற்றும் செரங் பகுதிகளிலும் சுமத்ராவின் லம்புங் மாகாணத்திலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்குமென ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஏற்கனவே இராணுவத் தலைவரும் சமூக விவகார அமைச்சு அதிகாரிகளும் அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுற்றுலா தளம் ஒன்றில் இருக்கும் இசை மேடை ஒன்று இராட்சத அலையில் அடித்துச் செல்லும் காட்சி சமூகதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணப்படுகிறது. இதன்போது அங்கு இருந்த இசைக் குழுவும் அலையில் அடித்துச் செல்லப்படுகிறது.

இந்த இசைக் குழுவின் பாடகர் ஒருவரான ரிபியான் பஜார்சா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் வீடியோவில், இசைக்குழுவின் பாடகர் மற்றும் முகாமையாளர் உயிரிழந்ததாகவும் தனது மனைவி மற்றும் மூன்று இசைக்குழு உறுப்பினர்கள் காணாமல்போயிருப்பதாகவும் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் கடல் பின்னால் செல்வது அல்லது அதற்கான எந்த சமிக்ஞையையும் காணவில்லை என்று கடலோரத்தில் இருந்த மக்கள் விபரித்துள்ளனர். இந்த சுனாமி அலை இரண்டு மீற்றர் தூரத்திற்கு கரையை அடித்துச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எந்த ஒரு உதவியை வழங்கவும் தயாராக இருப்பதாக அண்டை நாடுகளான மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளன.

இந்த சுனாமி அலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர். ஜாவா மற்றும் சுமத்ராவுக்கு சுமார் பாதித் தூரத்தில் அமைந்திருக்கும் அனக் க்ரகடோவா தீவில் உள்ள எரிமலை ஒன்று சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வெடித்த பின்னர் 9.30க்கு சுனாமி தாக்கி இருப்பதாக வானிலை மற்றும் புவிப்பெளதீகவியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நீருக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுனாமி அலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் முழு நிலவு என்பதால் அலை உயர எழ காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1883ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியது, நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியால் 2000க்கும் அதிகாமானவர்கள் உயிரிழந்தனர்.

சரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 26, 2004 அன்று 14 ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமியால் 2.28 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். அந்த சுனாமிக்கு காரணமான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.

Mon, 12/24/2018 - 11:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை