2019 இல் பிரான்ஸில் நடைபெறவுள்ள மகளிருக்கான பிபா உலகக் கிண்ண போட்டி அட்டவணை அறிவிப்பு

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா சார்பில் நடத்தப்படுகின்ற மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு ஜூன் 7ஆம் திகதி முதல் ஜூலை 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதில் நடப்புச் சம்பியனான அமெரிக்கா எப் குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், அண்டை நாடுகளுடனான இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

8ஆவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்கும் 24 அணிகளுக்கான பிரிவுகள் மற்றும் அட்டவணையை தீர்மானிப்பதற்கான குலுக்கல், பிரான்ஸின் பொலோஞ் பிலான்கோர்ட் நகரில் கடந்த சனிக்கிழமை (08) இரவு நடைபெற்றது.

தொடக்க போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் - தென் கொரியா அணிகள் மோதுகின்றன. அப் பிரிவில் நோர்வே, நைஜீரியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

குழு பி இல் ஜேர்மனி, சீனா, ஸ்பெய்ன், தென்னாபிரிக்கா ஆகியன இடம்பெற்றுள்ளதுடன், குழு சி இல் அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரேசில், ஐமைக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குழு டீ இல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, ஆர்ஜென்டீனா, ஐப்பான் ஆகிய பிரபல நாடுகள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக 2015ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற மகளிருக்கான கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அமெரிக்கவுடன் 5க்கு 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ஜப்பான் அணி இம்முறைபோட்டித் தொடரில் பலத்தபோட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜுன் மாதம் 9ஆம் திகதிநடைபெறவுள்ள இப்பிரிவுக்கான முதல் போட்டியில் அண்டை நாடுகளான இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன. இவ்விருஅணிகளும் ஏற்கனவே 2017இல் நடைபெற்ற யூரோகிண்ண கால்பந்து போட்டித் தொடரிலும் முதல் ஆட்டத்தில் போட்டியிருந்ததுடன், இதில் 6க்கு 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குழு ஈ இல் கனடா, கெமரூன், நியூசிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக 2015இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்துடனான காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய வரவேற்பு நாடான கனடா மற்றும் 2017 யூரோ சம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து அணியும் இப்பிரிவில் பிரபல அணிகளாக விளங்குகின்றன.

குழு எப் இல் நடப்புச் சம்பியனான அமெரிக்கா, தாய்லாந்து, சிலி, சுவீடன் ஆகியநாடுகள் இடம்பெற்றுள்ளன. இப்பிரிவில் அமெரிக்கா பிரபல அணியாக விளங்கினாலும், 2016 றியோ ஒலிம்பிக்கில் சுவீடன் அணியுடனான காலிறுதிப் போட்டியில் அமெரிக்கா தோல்வியைத் தழுவியது.

சிலி அணி, முதற்தடவையாக மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் களமிறங்கவுள்ளதுடன், தாய்லாந்து அணி, இறுதியாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

(பீ.எப் மொஹமட்)

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை