சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறியது ‘வொயேஜர் 2’

பூமியில் இருந்து 1977 ஆம் ஆண்டு புறப்பட்ட வொயேஜர் 2 விண்கலம் எமது சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறிய மனிதன் உருவாக்கிய இரண்டாவது பொருளாக வரலாறு படைத்துள்ளது.

இந்த விண்கலமானது அதன் இரட்டை விண்கலமான வொயேஜர் 1 க்கு 16 நாட்கள் முன்கூட்டி விண்ணில் செலுத்தப்பட்டபோதும் வொயேஜர் 2 தனது சக விண்கலத்தை விடவும் ஆறு ஆண்டுகள் கழித்தே விண்வெளியின் நட்சத்திரங்களுக்கு இடையிலான பகுதியை எட்டியுள்ளது.

வொஷிங்டனில் இடம்பெற்ற அமெரிக்க புவிப்பெளதிக ஒன்றிய கூட்டத்திலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் தலைவர் பேராசிரியர் எட்வர்ட் ஸ்டோன் இதனை உறுதி செய்துள்ளார்.

சூரிய குடும்பத்தில் இருந்து கடந்த நவம்பர் 05 ஆம் திகதி வெளியேறிய வொயேஜர் 2 விண்கலம் தற்போது, “விண்மீனிடைவெளிக்குள்” நுழைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தினத்தில் சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் துகள்களின் தொடர்பு விண்கலத்தில் இருந்து திடீரென்று முறிந்துள்ளது. விண்கலம் ‘கதிர்மண்டல’ எல்லையை கடந்துள்ளதை இது காட்டுகிறது. இது சூரிய மண்டலத்தின் எல்லைப் பகுதியாகும்.

இதன்படி இந்த விண்கலம் தற்போது பூமியில் இருந்து 18 பில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. அது மணிக்கு 54,000 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. எனினும் வொயேஜர் 1 விண்கலம் மேலும் வேகமாக மணிக்கு 61,000 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்போது 22 பில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

வெளிக்கிரகங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தவே வொயேஜர் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்தது. எனினும் இந்த இரு விண்கலங்களும் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியுன் கிரகங்களில் தனது ஆய்வுகளை 1989 ஆம் ஆண்டாகும்போது முடித்துக் கொண்டு தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்தன.

எவ்வாறாயினும் தற்போது அதிவேகமாக பயணித்து வருகின்றபோதும் வொயேஜர் 1 விண்கலம் அருகாமை நட்சத்திரத்தை அடைவதற்கு சுமார் 40,000 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை